Pages

Saturday, June 22, 2013

நெரிசல் தவிர்க்க பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்

சென்னை: பள்ளி மாணவர், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்கும் வகையில், அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது, அரசு பள்ளிகள் காலை, 9:30 மணிக்கு துவங்குகின்றன. அதே நேரத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும், அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், பள்ளி மாணவர், குறித்த நேரத்தில், பள்ளிக்கு செல்வதில் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து, நாளை முதல், பள்ளிகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும் என, பள்ளி கல்வி துறையால் வெளியிடப்பட்டுள்ள, 2013-14ம் கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அட்டவணையில், காலை, 9:30 மணிக்கு பள்ளிகள் துவங்கும்; மாலை, 4:30 மணிக்கு முடியும். புதிய அட்டவணைபடி, காலை, 9:00 மணிக்கு பள்ளிகள் துவங்கும், மாலை, 4:15க்கு முடியும். இதில், 12:10 - 12:25க்கு, யோகா, 12:25 - 12:40க்கு நீதி கதை, நீதி போதனை, உடல் நலம் மற்றும் சுகாதாரம், கல்வி, கலை கல்வி, முதல் உதவி, தற்காப்பு கலை, 1:10 - 1:25க்கு, வாய்ப்பாடு; 1 - 5ம் வகுப்பு வரை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இரண்டு சொற்களை எழுத சொல்ல வேண்டும்; 6 - 9 வரை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாக்கியம் அமைக்க கற்று தர வேண்டும்; 9ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இரண்டு நிமிடம் பொது அறிவு எழுதுதல், குழு விவாதம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய அட்டவணையின் படி, திங்களன்று பொது வழிபாடும், செவ்வாய் முதல் வெள்ளி வரை, வகுப்பில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமான செயல்திட்டங்களும் இருக்கும். மேலும், புதிய அட்டவணையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10, 11, 12ம் வகுப்பு பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: புதிய நடைமுறையில், பள்ளிகள் திறப்பதை அடுத்து, மாணவர்கள் நலன் கருதி, போக்குவரத்து வசதியை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும். மதிய உணவு இடைவேளைக்கு, 30 நிமிடம் போதுமானதாக இருக்காது. சத்துணவு மற்றும் விடுதி உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, இந்த நேரம் போதாது. யோகா கல்வியை அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார்.

0 comments:

Post a Comment